×

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 5 மணி நேரம் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு இன்று அதிகாலை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 5 மணி நேரம் தாமதமானது. இதனால் சென்னை விமானநிலையத்தில் லண்டன் செல்லவேண்டிய 229 பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து நாள்தோறும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 5.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு வந்து சேரும்.

பின்னர். இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் காலை 7.45 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை லண்டனிலிருந்து 247 பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

பின்னர், அங்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, அந்த விமானம் இன்று காலை 10.30 மணியளவில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக சென்னை சர்வதேச விமான முனையத்தில் தரையிறங்கியது. பின்னர் அதே விமானம், மீண்டும் சென்னையில் இருந்து இன்று மதியம் 12.20 மணியளவில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக லண்டன் புறப்பட்டு செல்லும் என ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக லண்டன் புறப்பட்டு செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான முனையத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 229 பயணிகள் முன்னதாகவே வந்து காத்திருந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகை தாமதம் காரணமாக, அனைத்து பயணிகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்து, ஓய்வறையில் அமரவைக்கப்பட்டு உள்ளனர். லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் 5 மணி நேர தாமத வருகையால் அனைத்து பயணிகளும் அவதியுற்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 5 மணி நேரம் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : British Airways ,Chennai airport ,Meenambakkam ,
× RELATED சென்னையில் விமானம் தாமதம் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் தவிப்பு